சனி, 10 ஏப்ரல், 2010

News



இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது.
உலகம் முழுவதும் கல்லீரல் தானமாக கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. எனவே கிடைத்த கல்லீரலை அதிகபட்சம் பேருக்குப் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. அதேசமயம், இந்தியாவில் இவ்வாறு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒரு கல்லீரலைப் பிரித்து இருவருக்குப் பொருத்துவது நோயாளிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும் என்றார் டாக்டர் ரெலா.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை யில் டாக்டர் ரெலா இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை செய்துள்ளாராம். இந்த தொழில்நுட்பம் ஐரோப்பாவில் உருவானது. கிங்ஸ் மருத்துவமனையில் டாக்டர் ரெலாதான் முதல் முறையாக இதை செய்து அறிமுகப்படுத்தினாராம்.
சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கல்லீரலைத் தானமாக பெற்று அதைப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பொருத்தியுள்ளார் டாக்டர் ரெலா.
தானமாக பெறப்பட்ட கல்லீரலை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதில் சிறிய இடதுபுறப் பகுதியை இளம் பெண் ஒருவருக்கும், பொரிய பகுதியை வயதான பெண்மணிக்கும் பொருத்தியுள்ளனர்.
கல்லீரல் பொருத்தப்பட்ட இளம் பெண் , கிரிக்லர் நஜர் சின்ட்ரோம் என்ற அரிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இதுபோன்ற பிரச்சினை இருந்தால் பிறக்கும்போதே, மஞ்சள் காமாலை நோய் வரும். இந்தப் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவ நேரிடும் என்றார் டாக்டர் ரெலா.

page

An adventure called CaratLane