Thanks
http://www.nitharsanam.net
உறைய வைத்த கருமுட்டை மூலம் கர்ப்பமாகும் நவீனமுறையில் 28 வயது பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த சாதனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.ஜி.ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. இதுபற்றி டாக்டர் கமலா செல்வராஜ், அவரது மகள் டாக்டர் பிரியா செல்வராஜ் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:- குழந்தை இல்லாத குறையைப் போக்குவதில் மருத்துவத் துறையின் இனப்பெருக்கவியல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் துறையில் நாளுக்குநாள் ஏற்படும் புதிய அணுகுமுறைகள், நவீன சிகிச்சை முறைகளால் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலே முதன்முறையாக எங்கள் ஜி.ஜி. ஆஸ்பத்திரியில் சோதனை குழாய் மூலம் 1990-ம் ஆண்டு முதல் பெண் குழந்தை பிறந்தது. கமலரத்தினம் என பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு தற்போது 18 வயது ஆகிறது. பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதுவரை கருவையும், உயிர் அணுக்களையும் உறைய வைத்து பாதுகாப்பது சாத்தியமாக உள்ளது. இந்த முறைப்படி, தென்னிந்தியாவில் முதன்முறையாக 1998-ம் ஆண்டு எங்கள் ஆஸ்பத்திரியில் உறைய வைத்த கருவில் இருந்து 3 குழந்தைகள் (2 ஆண், 1 பெண்) பிறந்தன.
28 வயது வடஇந்திய பெண்
ஆனால், கருமுட்டையை அதன் அமைப்பின்படி உறையவைத்து, உருக வைத்து பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. கருமுட்டையை மிகவும் குளிர்ந்த நிலையில் உறையவைத்து பின்னர் தேவைப்படும் நேரத்தில், அதை போதிய வெப்பத்தில் உருக வைக்கும்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பல்வேறு உயிர்காக்கும் திரவங்களை உரிய பாதுகாப்பு முறைகளுடன் சேர்த்து ஆராய்ந்ததில் கருமுட்டையை உறைய வைப்பதும், உருக வைப்பதும் சாத்தியம் என்று கண்டறியப்பட்டது. அதன்படி, உறைய வைக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து உலகத்திலேயே முதல் குழந்தை ஆஸ்திரேலியாவில் பிறந்தது.
இந்த முறைப்படி, கருமுட்டையை உறையவைத்து அதனைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் நாங்கள், 2005-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை உறைய வைத்த 75 கருமுட்டைகளுக்குள் ஆண் உயிர்அணுக்களை செலுத்தி சோதனை நடத்தினோம். இதில், ஒன்றுதான் வெற்றி பெற்றுள்ளது.
அதாவது, சில மாதங்களுக்கு முன் எங்கள் ஆஸ்பத்திரிக்கு 28 வயது வடஇந்திய பெண் ஒருவர் வந்தார். கரு தங்குவதில்லை என்று கூறி சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவரை சோதித்து பார்த்தபோது கருமுட்டைகள் உற்பத்தியில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அவருக்கு இரண்டுமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
இதய துடிப்புடன்
கருமுட்டை உற்பத்தியில் பிரச்சினை இருப்பதால் கருமுட்டையை தானமாகப் பெற்று அதற்குள் அவரது கணவரின் உயிர்அணுவை செலுத்தி கர்ப்பம் அடையச் செய்யலாம் என்று கூறினோம். அதற்கு அந்தப் பெண்ணும், அவரது கணவரும் ஒப்புக் கொண்டனர்.
உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை எடுத்து சாதாரண உடல் வெப்பநிலைக்கு அதை கொண்டு வந்தோம். பின்னர் அந்த கருமுட்டையில் ஊசி மூலம் அவரது கணவரின் உயிர்அணுவை செலுத்தி சோதனை குழாயில் கருவை அந்தப் பெண்ணின் கர்பப்பையில் வைத்தோம். தற்போது அந்த பெண் கர்ப்பம் அடைந்து 7 வாரம் ஆகிறது. கருவில் இதயத்துடிப்பு இருக்கிறது. இந்திய அளவில் முதன்முறையாக இந்த சாதனை நடந்துள்ளது.
கட்டணம்
இந்தப் பெண்ணுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்த பிறகு, மேலும் பல பெண்களுக்கு இதுபோன்ற நவீன சிகிச்சை முறையில் குழந்தை பிறக்க செய்வோம். அதன்பின்னரே, இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
கருமுட்டையை சேமிக்கும் வசதி எங்கள் ஆஸ்பத்திரியில் உள்ளது. 20 வயது முதல் 30 வயது உடைய பெண்கள் கருமுட்டையை சேமித்து வைக்கலாம். அவ்வாறு உறைய வைக்கப்படும் கருமுட்டையை 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதேநிலையில் வைத்திருக்க முடியும்.
யார் கருமுட்டை சேமிக்கலாம்?
இளம்வயதில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஹீமோதெரபி, ரேடியேசன் போன்ற சிகிச்சை அளிக்கும் போது செல்கள் அழிந்து கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படும். இப்படிப்பட்ட பெண்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முனëபு தங்களது கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.
தாமதமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்கள் தங்களது இளம்வயதிலே கருமுட்டையை சேமிக்கலாம். 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் கருமுட்டையின் எண்ணிக்கையும், தரமும் குறைந்துவிடும்.
இளம்வயதில் விவாகரத்து செய்து கொண்ட பெண்கள் கருமுட்டையை சேமித்து வைத்தால், பிற்காலத்தில் மறுமணம் செய்ய நேரிடும்போது அந்த கருமுட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். பரம்பரையாக சிறுவயதில் கர்ப்பப்பை செயலிழந்து போகக்கூடியவர்களும் கருமுட்டையை சேமிக்கலாம். உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெறுவதில் எந்த சட்டசிக்கலும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.