ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஆளில்லா Vehicle!!



மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.

பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த போதிலும், நவீன ஆளில்லா வானூர்திகள் தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு மூலமாகவோ அல்லது முற்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப தன்னியக்கமாகவோ இயக்கப்படுகின்றது.

நவீன இராணுவப் பயன்பாட்டிலுள்ள ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணி மட்டுமல்லாது தாக்குதல் நடாத்தும் திறன்வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவைதவிர இராணுவப் பயன்பாடற்ற செயற்பாடுகளான தீயணைப்பு, பொதுப் பாதுகாப்புச் சேவையினரின் கண்காணிப்புப் பணி போன்றவற்றிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் அவற்றின் பயன்பாட்டுரீதியாக ஆறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

1. எதிரிப் படைகளின் தரை இலக்குக்களைத் தாக்கியழித்தல் (aerial attack)
2. சமர்க்கள அவதானிப்புப் பணி (reconnaissance)
3. வான் யுத்தம் (dog fight)
4. வான்வழி இராணுவப் போக்குவரத்து
5. ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணி (research and development)
6. பொது மற்றும் வர்த்தகப் பணி (civil and commercial purpose)

இவ் ஆறு வகையான ஆளில்லா வானூர்திகளும் அவற்றின் பறப்பு வீச்செல்லை (range), பறப்பு உயரம் (altitude) போன்றவற்றின் அடிப்படையிலும் இவ்வகை வானூர்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பல்வேறுபட்ட ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பாகப் (unmanned aircraft system) பயன்படுத்திவருகின்றது. இவ்வகையான தொகுதிகளிலுள்ள வானூர்திகள் இணைக்கப்பட்ட வலையமைப்பினூடு இணைந்து செயற்படுவதுடன் தரையிலுள்ள துருப்புக்களுடன் தொடர்பைப் பேணி தகவல்களை வழங்குகின்றன. இவ்வகையான ஆளில்லா வானூர்தித் தொகுதிகளின் வலையமைப்பு Tier என்ற சொற்பதத்தினாற் குறிக்கப்படுகின்றது. இராணுவத் திட்டமிடலாளர்கள் தனித்துச் செயற்படும் வானூர்திகளை இவ் வலையமைப்பில் தொழிற்படும் வானூர்திகளிலிருந்து பிரித்தறிய இச் சொற்பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆளில்லா வானூர்தி தொகுதி வலையமைப்பானது பல்வேறுபட்ட வகையான ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும். அகெரிக்க வான்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியன தமக்கெனத் தனித்தனியான ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பைக் கொண்டுள்ளன. இவ்விரு தொகுதியமைப்புக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே இயக்கப்படுகின்றன.

ஆளில்லா வானூர்திகள் பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பொதுவானதும் பெரும்பாலானதுமான பயன்பாடு ஏதோவொரு வகையான அவதானிப்புப் பணியாகவே காணப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் மிகக்குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

அவதானிப்புப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை வானூர்திகள் இராணுவம்சார் அவதானிப்பு நடவடிக்கை, தாவர மற்றும் விலங்குகளின் அவதானிப்பு, கடல்சார் அவதானிப்புப்பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையான பயன்பாட்டிற்காக கட்புல ஒளிப்படக்கருவி (visual light camera), அகச்சிவப்புக்கதிர் ஒளிப்படக்கருவி (infrared camera) மற்றும் ரேடார் அவதானிப்புக் கருவி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. வேறுசில சிறப்புப் பயன்பாட்டிற்காக நுண்ணலை உணரி (microwave sensor) மற்றும் புறஊதாக்கதிர் உணரி (ultraviolet sensor) போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர வளியிற் காணப்படும் நுண்ணுயிர்கள் (microorganism) மற்றும் இராசயணப் பொருட்கள் போன்றவற்றை அவதானிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை வானூர்திகள் உயிரி உணரி (biological sensor) மற்றும் இரசாயண உணரி (chemical sensors) போன்றவற்றைப் பயன்படுத்துகினறன.

தற்காலப் பயன்பாட்டிலிருக்கும் கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் அதிலுள்ள கருவிகள் மூலம் அவதானிக்கும் காட்சிகளை உடனுக்குடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கும். இதன்காரணமாக இவ்வானூர்திகள் எதிரிப்படைகளாற் சுட்டுவீழ்த்தப்பட்டாலும் அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தொலைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஆளில்ல அவதானிப்பு வானூர்திகள் அவதானிக்கும் காட்சிகளையும் தரவுகளையும் அதனுள்ளிருக்கும் பதிவுக்கருவியிற் பதிந்து வைத்துக்கொள்ளும். வானூர்தி தளம் திரும்பியதும் அதனுள்ளிருக்கும் கருவியிற் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தானவையாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளில் இவ்வகை வானூர்திகளின் பயன்பாடு மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. நவீன இராணுவங்களின் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை வானூர்திகள் தரையிலுள்ள பாரிய எதிரித்தளங்களைத் தாக்கியளித்தற் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி தனிமனித இலக்குக்களை அழிக்கும் செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

page

An adventure called CaratLane