நமது இந்திய கலாசாரங்களில் பாரம்பரியம் மிக்க இசையாக கர்நாடக இசை விளங்குகிறது. இந்த இசைக்கு தலையசைக்காதவர்கள் எவரும் இல்லை என்று கூறலாம். முற்காலத்தில் இசைக் கற்க விரும்பியவர்கள் ஆசிரியருடன் தங்கி குருகுலம் பயிற்சியாக தான் இசைக் கற்று வந்தனர். இக்காலக்கட்டத்தில் இசை கற்பதற்கு அதித வாய்ப்புகள் உள்ளது. இசை எல்லோராலும் சுலபமாக கற்றுக் கொள்ள இயலாது, இசைக் கற்க குரல் வளம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒரு சிலர் எவ்வளவு தான் பயிற்சி பெற்றாலும் இனிமையாக பாடுவதென்பது கடினமாகவே உள்ளது. குரல் வளம் உள்ளவர்கள் முறையான பயிற்சி பெறுவதன் மூலம் இசையில் சிறந்து விளங்க முடியும். தற்போது இசை கற்பதற்கென்று ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் முழு நேரப் படிப்பாகவும், மாலை நேர படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. இன்னும் ஒருபடி முன்னேறி, அஞ்சல் வழிக்கல்வி முறையில் இசை பயிற்சியளிக்கப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கர்நாடக இசை என்பது வாய்ப்பாடு, வாத்தியங்கள் என இரண்டு வகையாக சொல்லித் தரப்படுகிறது. சில கல்வி நிறுவனங்களில் பரத நாட்டியம், வயலின், மிருதங்கம், வீணை உள்ளிட்ட பல பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இசையில் சான்றிதழ், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி போன்ற படிப்புகள் உள்ளன. இசைப் படிப்பு வழங்கும் பல்கலைக்கழகங்கள்: சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்ற பல்கலையில் இசை பட்டப்படிப்பாக கற்றுத் தரப்படுகிறது. அரசு இசைக் கல்லூரிகள்: சென்னை, மதுரை, கோவை, திருவையாறு போன்ற நகரங்களில் அரசு இசைக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் தேவாரம் கற்றுத் தருவதோடு கர்நாடக மரபிசையில் வாய்ப்பாட்டும் தனியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சி மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிப்பு, தவீல், கடம், பரதநாட்டியத்துக்கான நட்டுவாங்கம் மற்றும் நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட அனைத்து வகை பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அரசு இசைப்பள்ளி: தமிழ் நாட்டில் மொத்தம் 22 அரசு இசைப்பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு முழு நேர இசைப் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முழுவதும் முடிந்த பிறகு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். மாலைநேர பயிற்சி: சென்னை, மதுரை அரசு இசைக் கல்லூரிகளில் இசை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் முறையாக கற்று தரப்படுகிறது. இரண்டு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது. இசையில் ஆசிரியர் பயிற்சி: அரசு இசைக்கல்லூரிகளில் ஆசிரியருக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த ஓராண்டு பயிற்சி பள்ளி, கல்லூரிகளில் இசைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சியாகும். இசைக்கான முக்கிய கல்லூரிகள்: 1. ராணி மேரி மகளிர் கல்லூரி, சென்னை இங்கு இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி போன்ற படிப்புகள் படிக்கலாம். 2. தமிழிசைக் கல்லூரி, ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டதாகும். இக்கல்லூரியில் சான்றிதழ், இளநிலை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. 3. தஞ்சையிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பாக வழங்கி வருகிறது. 4. மதுரை சத்குரு சங்கீத வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கப்படுகிறது. 5. கலாஷேக்த்ரா - சென்னையில் புகழ்பெற்ற கலைக்கூடமாகும். இங்கு டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்குகிறது. 6. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பாக அளிக்கப்படுகிறது.
நன்றி தினமலர்